தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு - ஸ்டாலின்! - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மருத்துவ போராட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு

By

Published : Oct 28, 2019, 8:59 PM IST

காலமுறை ஊதிய உயர்வு, பட்ட மேற்படிப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் போராடி வரும் மருத்துவர்களை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பலமுறை எழுத்துப்பூர்வமாக தந்துள்ள வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நான்கு முக்கிய கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு கோரிக்கை மருத்துவர்களின் ஊதியம் சார்ந்ததாகவும் மீதமுள்ள கோரிக்கைகள் நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் பயனளிக்க கூடிய வகையிலும் உள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

உடலை வருத்தாமல் போராட்டத்தை மேற்கொள்ளுங்கள் -மு.க. ஸ்டாலின்

இதுவரை சுகாதாரத்துறை அமைச்சரோ முதலமைச்சரோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் மெளனம் காத்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் சில மாவட்டங்களில் ஐந்து பேர் என்று பிரித்துக்கொண்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில் குறிப்பாக சென்னை பொது மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் போராட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு

திமுக சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் போராடுவது நமது உரிமை ஆனால் உடலை வருத்திக்கொண்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இந்த போராட்டத்துக்கு திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமல்ல, மற்ற எல்லா எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து கடைசிவரை துணை நிற்போம் என்று உறுதிமொழி தந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details