தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் நாள் (ஜூலை 15) வருவதையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "ஜூலை 15 உலக நாட்காட்டிகள் அனைத்திலுமே இந்தத் தேதி இருக்கும் என்றாலும், தமிழ்நாட்டிற்கு இந்த நாளுக்கென தனித்த சிறப்பு உண்டு.
ஆம். கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகள் அனைத்திலும் கொண்டாடப்படும் இந்த நன்னாள்தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளாகும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், தனி முத்திரை பதித்த முதலமைச்சராக, 9 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து, இந்திய அரசியலுக்கும் அதுவரை இல்லாத புதிய வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் காமராஜர்; அவர் தந்த 'K - Plan' துணைக்கண்ட அரசியலில் தொலைநோக்கான தூய அத்தியாயம்.
திராவிட இயக்கத்துக்கும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் சமூக-அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தபோதும், மேடைகளில் கடுமையான விமர்சனங்கள் மாறி மாறி வைக்கப்பட்டபோதும், திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும், காமராஜர் மீது தனிப்பட்ட அன்பு செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜரும் அத்தகைய அரசியல் பண்பாட்டினைக் கடைப்பிடித்தார். அரசியல் களத்தில் எதிர்துருவங்களாக இருந்தபோதும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்கிற அரசியல் பண்பாட்டினைப் போற்றுவதில் முன்னோடியாக இருந்ததற்கு இப்படி எத்தனையோ சான்றுகள் உண்டு.
பெருந்தலைவர் வாழ்ந்த போதும்; அவர் வரலாறாக ஆனபோதும் அவர் மீதான மரியாதையைப் பல வகைகளிலும் வெளிப்படுத்தியவர் கருணாநிதி. கல்விக் கண் திறந்த கர்மவீரர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிய தலைசிறந்த முதலமைச்சர், அரசியல் பொதுவாழ்வில் அரிய மாமனிதர், திராவிட இயக்கத் தலைவர்களின் மாறா அன்புக்குப் பாத்திரமானவர்,
கருணாநிதி அவர்களின் மரியாதைக்குரிய காமராஜர் அவர்களின் பிறந்தநாளாம் ஜூலை 15 அன்று, அண்ணா அறிவாலயத்தில் பெருந்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்படவிருக்கிறது. நம் தலைவர் கருணாநிதி காட்டிய வழியில் ஜூலை 15ஆம் நாளினை, கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடித்து, பெருந்தலைவர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றிப் போற்றுவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்