சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவிக்காத திட்டங்களைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய ஆலோசனைகள் குறித்து திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டின் நலம் காக்க அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் குரல் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாநிலங்களுடன் ஆலோசனை
இரண்டு அவைகளிலும் தமிழ்நாட்டிற்கு தேவையான ஒன்றிய அரசின் உதவிகள் பெறுவது, நதி நீர்பாசனம், மேகதாது விவகாரம் ஆகிய பிரச்னைகளுக்கு குரல் எழுப்பப்படும். இன்றைக்கு அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்று அங்கே துறை அமைச்சரை சந்தித்திருக்கிறார்கள்.
அவர்கள் நம்பிக்கையான பதிலை தந்திருப்பதாக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் சொல்லியிருக்கிறார். நீதிமன்ற உத்தரவின்படி, மாநிலங்கள் நடந்துகொள்ள வேண்டும் என நீதிமன்றம் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறது.
இந்த நதி நீர் காவிரி ஆற்றில் இத்தகைய பணியை மேற்கொண்டால் பலன் பெற தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் ஆலோசனை பெற வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது.