சென்னை:திமுக பிரமுகரான செல்வம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மடிப்பாக்கம் அருகே அவரது கட்சி அலுவலகத்தின் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தல் தேதி நெருங்கி வந்த நிலையில் திமுக பிரமுகர் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல் துறையினர் 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும், அவரது மனைவிக்கு மடிப்பாக்கம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டதா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கூலிப்படையைச் சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், கிஷோர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபரான அருண் என்பவர் பிப்ரவரி 15ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முருகேசன் தான் கூலிப்படையின் தலைவன் என்பதால் காவல் துறையினர் சரணடைந்த அருணை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிஷோர் என்பவர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்ய தங்களை வரவழைத்ததாகவும் கொலைக்கான காரணம் தங்களுக்கு தெரியாது என அருண் வாக்குமூலம் அளித்துள்ளார்.