சென்னை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி - திமுக இடையிலான கருத்து மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், திமுகவின் பத்திரிகையான முரசொலி நாளிதழ், இன்று (ஜூன் 8) ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டு உள்ளது.
இவ்வாறு வெளியான செய்தியில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால், நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும். அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது. ஜாகையை கமலாலயத்திற்கு மாற்றிக் கொண்டு களத்துக்கு வரட்டும். அப்போது முழுமையாக வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை.
ஒரு நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு, தினமும் அவர் செய்து கொண்டு வரும் குடைச்சல்கள் சகிக்க முடியாதவையாக இருக்கின்றன. அவர் ஏதோ இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைப் போலவோ அல்லது இந்திய மன்னரைப் போலவோ மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதைப் பற்றி பேசி இருக்கிறார். ஆளுநர், துணைவேந்தர்களிடம் என்ன பேச வேண்டும், தொழிலதிபர்களிடம் என்ன பேச வேண்டும் என்ற அடிப்படை கூடவா தெரியவில்லை? ஆளுநர் பதவி என்பது மத்திய தலைமையால் தற்காலிகமாக கொண்டு வந்து வைக்கப்படும் குரோட்டன்ஸ் தொட்டி. தொட்டி தோப்பாகாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்றும் (ஜூன் 7) தமிழ்நாடு ஆளுநரை முரசொலி பத்திரிகை கடுமையாக விமர்சித்து இருந்தது. அதில், “ஆளுநருக்குத்தான் வேலை இல்லை என்றால், தங்களுக்கு தரப்பட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் துணைவேந்தர்களை அழைத்து வைத்துக் கொண்டு ‘மேய்ற மாட்டை நக்கிடும் மாடு' வேலைகளை செய்து கொண்டிருக்கிறார், ஆளுநர்.