சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 'மோடி@20 நனவாகும் கனவுகள்' (Modi@20 Dreams Come True) என்ற புத்தகத்தையும், அம்பேத்கர் & மோடி (Ambedkar & Modi) ஆகிய புத்தகங்களின் தமிழ் பதிப்பை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று(பிப்.12) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் சமூக நீதி குறித்து அதிகமாக பேசி வருகிறோம். மறுபுறம் பட்டியலின மக்களுக்கான எதிரான குற்றங்களும் தொடர்கின்றனர்.
குடிநீரில் மலத்தை கலப்பது, பட்டியலின மக்களை அவமானப்படுத்துவது, அவர்களை கோயிலுக்குள் விட மறுப்பது, அங்கன்வாடி பள்ளிகளில் பிரித்து உணவு வழங்குவது போன்றவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பட்டியலின பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் 100 குற்றவாளிகளில் 93 பேர் விடுதலை ஆகிறார்கள். 7 சதவீதம் பேருக்கு தான் தண்டனை கிடைக்கிறது. ஆனால் நாம் சமூக நீதி குறித்தும், அம்பேத்கர் குறித்தும் பேசுகிறோம்" என கூறினார். ஆளுநரின் இந்த கருத்து தமிழ்நாடு அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது.
ஏற்கனவே அம்பேத்கர் & மோடி என்ற புத்தகத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த புத்தகத்தின் வெளியிட்டு விழாவிலும் ஆளுநரின் கருத்தானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து 'தமிழ்நாடு' என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூறலாம், திருக்குறளை ஜி.யு.போப் திரித்து மொழிபெயர்த்து உள்ளார். ஆளுநர் உரையில் தமிழ்நாடு சார்ந்த பல வார்த்தைகளை படிக்க மறுத்தது போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன. அந்த வரிசையில் ஆளுநரின் சமூக நீதி குறித்தான கருத்தும் சர்ச்சையானது.