தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கடந்தகால இருள் நீக்கி விடியல் தர...!' - ஸ்டாலினின் புத்தாண்டு வாழ்த்து - wishes for 2021 new year celebration

கடந்தகால இருள் நீக்கி, கவலைகள் துடைத்திட, தமிழ் மக்களுக்கு விடியல் தர வரும் ஆங்கிலப் புத்தாண்டை உளமார வரவேற்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

dmk leader stalin wishes for 2021 new year celebration
dmk leader stalin wishes for 2021 new year celebration

By

Published : Dec 31, 2020, 1:57 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கடந்த கால இருள் நீங்கும், கதிரொளி பரவும், மக்களின் கவலைகளைத் துடைத்திட வல்ல, காக்கும் கரங்களைக் கொண்ட நல்லாட்சி தமிழ்நாட்டில் மலரும். தமிழ் மக்களுக்கு விடியல் தரும் வாழ்வு புலரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டை உளமார வரவேற்று உவகை கொள்கிறேன்.

இருளை விரட்டும் உதயசூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும், தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எண்ணற்ற சவால்களும் சங்கடங்களும் நிறைந்த 2020-ஆம் ஆண்டின் தாக்கம் ஒரே நாளில் தணிந்துவிடாது. அவற்றை நீக்குவதற்கும் - மக்களுக்குத் தேவையான நன்மைகள் கிடைப்பதற்கும் தொடர்ந்து பாடுபட வேண்டும். அத்தகைய அறப் பணிகளில் அனைவரும் அக்கறையுடன் ஈடுபட வேண்டும்.

நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நன்னெறி ஏந்தி, நாளும் உழைத்திட ஊழியம் செய்திட, திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போல் இப்போதும் தயாராகவே இருக்கிறது. இந்த ஆங்கிலப் புத்தாண்டை, பேரிடர் காலக் கட்டுப்பாடுகளை அனுசரித்து, அமைதியும் அன்பும் நிறைந்த வாழ்த்து அலைகள் மேவிடும் நிகழ்வாகக் கடைப்பிடித்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். புத்தாண்டைத் தொடர்ந்து தை முதல் நாளாம் தமிழர் திருநாளாம் நம் பண்பாட்டை எடுத்துரைக்கும் தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் நன்னாள் வருகிறது.

மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற காலம் விரைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில், வழக்கம் போலத் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் அவரவர் பகுதிகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் ‘சமத்துவப் பொங்கல்’ விழாவினை, தமிழ்ப் பண்பாடு தவழ்ந்திடக் கொண்டாடிடவும், குதூகலம் கொண்டிடவும் வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளமுடன் வாழ்க - முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details