நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்குமா இல்லை அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருந்தது. நேற்று அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த சமயத்தில் திமுகவுடனும் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தேமுதிகவுக்கு கொடுக்க எங்களிடம் சீட் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
தெய்வத்துடனும், மக்களுடனும்தான் கூட்டணி என ஒரு காலத்தில் சொல்லிவந்த விஜயகாந்தின் கட்சி தற்போது ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடனும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திமுக, ஸ்டாலின், விஜயகாந்த்
இதற்கிடையே, தன்னை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது தொடர்பாக துரைமுருகன் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக சேர்த்துக்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ”நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால் தேமுதிகவுக்கான அறிவாலயம் கேட் மூடப்பட்டுவிட்டதால் அடுத்ததாக ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலக கேட்தான் தற்போது தேமுதிகவுக்கு இருக்கும் ஒரேவழி என கருதப்படுகிறது.
முன் போல் தேமுதிக இல்லாததால் அக்கட்சி தனித்து போட்டியிட யோசிக்கும். எனவே தற்போது அதிமுக கொடுக்கும் சீட்டுகளை வாங்கி கொள்ள வேண்டிய நிலையில் அக்கட்சி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.