சென்னை: நேற்றைய முன்தினம் (அக்.25) சென்னை கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் ஒன்றின் முன்பு, மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், உடனடியாக அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் மீது தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை அன்று இரவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து, அவருக்கு நவம்பர் 9 வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஆளுநர் மாளிகை தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீடியோ வாயிலாக குற்றம் சாட்டினார். அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருந்தார். மேலும், இதனை தேசிய புலனாய்வு முகமை அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி அறிக்கை விடுத்தார்.
இவ்வாறு, பாஜக தரப்பில் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மனநிலை சரியில்லாத நபர் செய்த செயலுக்கு தாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என கேட்டார். இது மீண்டும் விவாதப் பொருளாக மாற, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனிடையே, காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில், இரண்டு பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், நேற்று (அக்.26) சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆளுநரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை என்றும், சாதாரண நாசக்காரச் செயலாக தாக்குதலை நீர்த்துப் போகச் செய்ததாகவும் ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டி அறிக்கை விடுத்தது. இதனையடுத்து, காவல் துறை உரிய விசாரணை நடத்தி வருவதாக தமிழ்நாடு காவல் துறை தரப்பிலும், தமிழ்நாடு அரசு தரப்பிலும் அறிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று மாலை 6.32 மணிக்கு வெளியிட்ட X பதிவில், “ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது.
இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது” என பதிவிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக தொழில்நுட்ப பிரிவு (திமுக ஐடி விங்) நேற்று இரவு 9.08 மணிக்கு வெளியிட்ட X பதிவில், “பாஜகவின் மலிவான திட்டம் அம்பலம். ராஜ்பவன் அருகே பெட்ரோல் குண்டை வீசிய கருக்கா வினோத்துக்கு முந்தைய வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த முத்தமிழ் செல்வக்குமார் ஆஜரானார்” என குறிப்பிட்டது மட்டுமல்லாமல், ஆஜரானதற்கான சான்றுக்கான ஒரு நகலையும், முத்தமிழ் செல்வக்குமார் பாஜகவின் பிரிவில் பொறுப்பில் இருப்பதற்கான அறிக்கை ஒன்றையும் புகைப்படமாக வெளியிட்டு உள்ளது.
முன்னதாக, கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வெளியில் எடுக்க திமுக முயற்சி செய்வதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி இருந்தார் என்பதும், கருக்கா வினோத்தை ஜாமீனில் வெளியே எடுத்தது யார் என்றும் பாஜக தரப்பில் பல்வேறு கேள்விகளும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆளுநர் மாளிகையில் குண்டு வெடித்ததாக கூறுவதில் உண்மையில்லை - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்