சென்னை: இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2000 கல்குவாரிகள் மற்றும் சுமார் 3500 கிரஷர் யூனிட்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் அரசுத் திட்டங்களுக்கு, எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் வினியோகம், இந்த ஆலைகளை நம்பியே இருக்கிறது.
திறனற்ற திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தமிழகத்தில் தொழிற்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கல்குவாரிகளும் விதிவிலக்கல்ல. கடந்த சில நாட்களாக, குவாரிகளைப் பார்வையிடுகிறோம் என்ற பெயரில், தேவையற்ற புகார்களைக் கூறி, ஆலை உரிமையாளர்களை அச்சுறுத்துகிறது என்று குற்றம் சாட்டி, கல்குவாரி உரிமையாளர்கள், எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டனர்.
இதனால், தமிழகம் முழுவதும், கட்டுமானப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், குவாரித் தொழிலைச் சார்ந்துள்ள, லாரி தொழில், கட்டுமானத் தொழில், மற்றும் தொடர்புடைய சிறு சிறு தொழிலாளர்கள், மற்றும் வீடுகள் கட்டிக் கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர மக்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர், தங்கள் தினசரி வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
கால தாமதமின்றி, குத்தகை உரிமம் வழங்கப்பட வேண்டும். சிறு கனிமங்களுக்கு, சுரங்கத் திட்டம் வழியாக குத்தகை உரிமம் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தாமதமாகும் குவாரி உரிமம் புதுப்பித்தலை குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும்.