பத்து வருடங்கள் கழித்து மீண்டும் அரியணையில் திமுக அமர்வதால் உடன்பிறப்புகள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். கடந்த தேர்தலில் வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்த திமுக அரியணையை அதிமுகவிடம் பறிகொடுத்தது.
அதனால், இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டுமென்பதில் திமுக மிகத் தீவிரமாகக் களமாடி வெற்றியையும் பெற்றிருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், கடந்த காலத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற கதை எப்படி என்பதை நினைவுகூர்வது உடன்பிறப்புகளுக்கு மேலும் இதமான மனநிலையை கொடுக்கும்.
28 படிகளுக்கு பாதை போட்ட திமுக:
1957ஆம் ஆண்டு தேர்தலில் திமுக முதல்முதலில் வாக்கரசியலுக்குள் நுழைந்து 14 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. அதற்கடுத்து நடந்த 1962ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியின் வாக்குவங்கி 27 விழுக்காடாக உயர்ந்தது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கும் திமுக நகர்ந்தது.
அதன் பிறகு நடந்த 1967 தேர்தல், திமுகவின் வரலாறை மட்டுமல்ல தேசியக் கட்சியான காங்கிரஸின் வரலாறையும் மாற்றி அமைத்தது. அதுவரை தமிழ்நாட்டில் உயர்ந்திருந்த கை, உதயசூரியனின் அனலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தலை மேல் கையை வைத்து உட்கார்ந்து விட்டது.
அந்தத் தேர்தலில், 137 இடங்களைக் கைப்பற்றி திமுக முதன்முதலாக ஆட்சியமைத்தது. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் பெயரில் ’நாடு’ என்ற சொல் இருப்பது தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டும்தான். அப்படிப்பட்ட பெருமையை மாநிலத்திற்கு கொடுத்தது திமுகவின் அந்த ஆட்சிக்காலம்.
முக்கியமாக, இன்று இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மாநில சுயாட்சி, ஹிந்தி திணிப்பு குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஏறத்தாழ 50 வருடங்களுக்கு முன்னரே செய்துகாட்டியது அப்போதைய திமுக ஆட்சி. திமுகவைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா இரண்டு ஆண்டுகளில் மறைந்தாலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட பல படிக்கட்டுக்கள் முன் நகர்ந்தது.
அண்ணா போனாலும் தம்பி இருக்கிறேன்
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அவரது தளபதிகளில் ஒருவரான கருணாநிதி தலைமையில் திமுக சந்தித்த முதல் தேர்தல் இது. பேரறிஞரின் மறைவால் தமிழ்நாட்டு மக்கள் சோர்ந்துபோயிருப்பார்கள், விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கலாம் என்று தேசியக் கட்சியான காங்கிரஸ் உற்சாகமடைய, அந்த சீன்லாம் இங்கு இல்லை அண்ணா போனால் என்ன அவரது தம்பி நான் இருக்கிறேன் என கருணாநிதி அடுத்த அவதாரமாகத் தோன்றினார்.
203 இடங்களில் கருணாநிதி தலைமையில் போட்டியிட்ட திமுக 184 தொகுதிகளில் வென்று அசுர பலத்துடன் ஆட்சியமைத்து காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், அதாவது அண்ணாவின் மறைவுக்கு பிறகு முதலமைச்சராக இருந்த கருணாநிதி மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக ராஜமன்னார் குழுவை அமைத்து மாநில சுயாட்சி முழக்கத்தை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் சென்றார்.
இந்தக் குழுவானது, 1971ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதியிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் எதற்கு என்பது அண்ணாவின் நிலைப்பாடு. ஆனால், அதனை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், கருணாநிதியால் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு அளித்த அறிக்கையில், ஆளுநர், மாநில அரசுகளின் ஆலோசனையைப் பெற்றே நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதேபோல், நீதித்துறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது மாநில அரசு, ஆளுநர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் கருத்துகள் முக்கியமாகக் கருதப்பட வேண்டும், மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று அதில் இடம்பெற்ற பல விஷயங்கள் மாநில சுயாட்சி தனது மூச்சை இழக்காமல் இருக்க இன்றளவும் காரணமாக இருக்கிறது.
அண்ணாவிற்கு மரியாதை செய்த கலைஞர் அதுமட்டுமின்றி, மாநிலங்களுக்கென தனிக் கொடி பறக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1970ஆம் ஆண்டு அதற்குரிய வடிவமைப்பையும் வெளியிட்டார் கலைஞர்.
கொடி பறக்க வேண்டுமென்பது மட்டுமின்றி, சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநில முதலமைச்சர்களே கொடியேற்ற வேண்டுமென்பதை ஆணித்தரமாக கூறி அந்த உரிமையைப் பெற்றுக்கொடுத்ததும் திமுகவின் அந்த ஆட்சிக்காலம் தான்.
திமுகவின் அந்த ஆட்சிக்காலத்தில்தான் பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதல்முறையாக குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது, இந்தியாவிலேயே முதல்முறையாக கை ரிக்ஷா முறை ஒழிக்கப்பட்டது, இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களை காவல் துறையில் பணியமர்த்தியது என பல பல சாதனைகளைச் செய்தது. அதேசமயம் இந்த ஆட்சிக்காலத்தில்தான் திமுகவிலிருந்து விலகி எம்ஜிஆர் தனிக்கட்சியையும் தொடங்கினார். நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க 1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
இந்திராவைக் கண்டு இந்தியாவே அலறிக்கொண்டிருந்த சூழலில் திமுக மட்டுமே எதிர்த்து நின்றது. இதனால் ஆத்திரமடைந்த இந்திரா, திமுகவின் ஆட்சியை கலைத்தார். அதன் பிறகு எம்ஜிஆர் மறைவுவரை திமுகவால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியவில்லை.
வனவாசம் மறைந்து மீண்டும் கோட்டைக்குள்:
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் திமுக 150 இடங்களில் ஆட்சியமைத்தது. இந்த ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றி தந்தை பெரியாரின் பேச்சுக்கு செயல்வடிவம் கொடுத்தது திமுக.
அதுமட்டுமின்றி, 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம், ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை கல்வி கற்க வகைசெய்திட வேண்டும் என்பதற்காக 1989இல் ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம் என ஏராளமான சமூக நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ராஜீவ் காந்தி மரணத்தையொட்டி திமுகவின் ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது.
உதயசூரியன் கடந்து வந்த பாதை முற்போக்கில் கலந்த தொழில்நுட்பம்
ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அரியணையில் அமர்ந்தது திமுக. அண்ணாவின் இரண்டு வருட ஆட்சிக்காலத்திலும், அதற்கு அடுத்து நடந்த திமுக ஆட்சிக்காலங்களிலும் மாநில சுயாட்சி, சாமானிய மக்களுக்கான உரிமை, சமூக நீதி, சமத்துவம் என தமிழ்நாடு முற்போக்கு படிக்கட்டில் ஏறியது என்றால் 1996 - 2001 ஆட்சிக்காலத்தில் முற்போக்கு படிக்கட்டில் மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் தமிழ்நாடு தனது தடத்தை வீரியமாகப் பதிக்கத் தொடங்கியது.
இக்காலக்கட்டத்தில்தான் 340 கோடி ரூபாயில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா திறக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பயோ டெக் (உயிரி தொழில்நுட்பவியல்) என்ற வார்த்தையைக் கண்டு மற்ற மாநிலங்கள் ஒதுங்கிக் கொண்டிருந்த சமயத்தில் முதல்முறையாக தமிழ்நாட்டில் அதற்கான விதையை திமுக போட்டது. அதில் ஆச்சரியம் என்னவென்றால், விவசாயம், உணவு, மருத்துவப் பொருள்களை தயாரித்து உள்நாட்டுச் சந்தையில் விற்கவும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நோக்கிலும், பெண்களுக்கான உயிரி தொழில்நுட்பவியல் பூங்காவாக அதை உருவாக்கினார் கருணாநிதி.
தகவல் தொழில்நுட்பப் பூங்கா சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 1996 - 2001ஆம் ஆண்டுவரையிலான நடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட விதையால்தான் நவீன தமிழ்நாடு பிறந்து, தவழ்ந்து, நடக்க ஆரம்பித்திருந்தது. அதை பிரசவித்து நடை பழக்கிக்கொடுத்தது திமுக.
கலைஞரின் கடைசி ஆட்சி
1996க்கு பிறகு 2006ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த காலக்கட்டத்திலும் திமுகவின் ஆட்சி வீரியம் மிக்கதாக இருந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றால் இந்த ஆட்சிக்காலத்தில் விவசாயத்தின் பக்கம் திமுகவின் கவனம் திரும்பியது. நில உச்ச வரம்புச் சட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்தது, பம்பு செட் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயக் கடன் தள்ளுபடி என விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய பசுமையைக் கொடுத்தது திமுக.
அதுமட்டுமின்றி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் மூலம், அண்ணா, பெரியார் என்ற இரு பெரும் தலைவர்களின் கனவை நனவாக்கியது திராவிட முன்னேற்ற கழகம். மேலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் விலக்கு என ஏராளமான திட்டங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டன. அதேசமயம், திமுகவின் ஆட்சிக்காலங்களிலேயே 2006 - 2011 ஆட்சிக்காலம்தான் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளான ஆட்சிக்காலம். இதுவே அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதியின் கடைசி ஆட்சி.
தந்தையின் முத்தத்தில் குளிர்ந்த ஸ்டாலின் தற்போதைய தமிழ்நாட்டு முகம்: திமுக செய்ய வேண்டியது
2006க்கு பிறகு இரண்டு தேர்தல்களைச் சந்தித்த திமுக அவற்றில் தோல்வியடைந்தது. பத்தாண்டுகளுக்குப் பின் வென்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. கடந்த கால திமுக ஆட்சிகளில், மாநில சுயாட்சி, சமூக நீதி, விவசாயம், கல்வி, தொழில்நுட்பம் என அனைத்திலும் சிறப்பான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது வரலாறு.
50 வருடங்களுக்கு முன் திமுக முதல்முதலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபோது சமூக நீதி, மாநிலத்திற்கு உரிமை என்பது அறவே இல்லாமல் இருந்தது. திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து அதனை சீராக்கி தமிழ்நாட்டின் முகத்தை முற்போக்கு முகமாகவும், சுயமரியாதை முகமாகவும் மாற்றியது.
தற்போதும், தமிழ்நாட்டின் முகமான சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அமையவிருக்கும் திமுக ஆட்சி சீர் செய்ய வேண்டிய ஏகப்பட்ட விஷயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதனை சீர் செய்து அண்ணா, கருணாநிதி கால திமுக எப்படி தமிழ்நாட்டின் முகத்தை மாற்றி அமைத்ததோ அப்படி ஸ்டாலின் கால திமுகவும் மாற்ற வேண்டுமென்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது. அதுதான் அவசரமான அவசியமும்கூட...