இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அக்டோபர் 1ஆம் தேதி கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு திட்டத்தை அறிவித்தார். அதாவது, கண்டலேறு அணையில், பூண்டி ஏரிக்கு நீர் வரும் கால்வாய் அடிக்கடி சேதமடைகிறது. அதைத் தவிர்க்க கண்டலேறுவிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்க ஆலோசித்து வருகிறோம் என்பது தான் அந்தத் திட்டம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டம் குறித்து முழு விவரம் அறிந்து பேசினாரா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இத்திட்டம் முதலமைச்சரின் சிந்தனையில் உதித்தத் திட்டம் அல்ல. ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரை கிருஷ்ணா நீரை கொண்டு வருவதற்கு பல திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு தான் கால்வாய் மூலம் நீரைக் கொண்டு வருவது என்பது. இந்தத் திட்டத்திற்கு அன்று ஒப்புதல் கையொப்பமிட்டது அதிமுக அரசுதான்.
இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகும் குறிப்பாகக் கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை உள்ள கால்வாய் அடிக்கடி பழுதடைந்தும், நீர் சேதாரமும் ஏற்பட்டுவந்தது. இதனால் பூண்டிக்கு வரும் நீர் குறைந்ததது. இதனையறிந்த தவத்திரு புட்டபர்த்தி சாய்பாபா, சென்னை மக்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்க, அவராகவே முன்வந்து கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்வதோடு அதற்காக ஆகும் செலவையும் அவரே ஏற்றுக் கொள்ளவதாகவும் அறிவித்தார்.