சென்னை:வளசரவாக்கம் திருவள்ளூர் சாலையில் தனசேகரன் (69) என்பவர் வசித்து வருகிறார். கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த இவர், தற்போது வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அதேநேரம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனசேகரனின் பூர்வீக சொத்தை விற்பனை செய்ததில், இவரது பங்காக சுமார் 30 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது.
இதனை அறிந்த அதே பகுதியில் வசித்து வரும் தனசேகரனின் உறவினரும், 152வது வார்டு திமுக கவுன்சிலருமான பாரதி, தனது தாய் புஷ்பா உடன் சென்று தனசேகரனிடம் 10 லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். மேலும், அதற்கு 3 சதவீதம், அதாவது மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி கடந்த 2018ஆம் ஆண்டு கடனாக பெற்றுள்ளார்.
தொடர்ந்து, அதே ஆண்டு திமுக கவுன்சிலர் பாரதி, தனது தோழியான வளசரவாக்கத்தைச் சேர்ந்த வனிதா என்பவருக்கும் நிலம் வாங்க 10 லட்சம் பணம் தேவைப்படுவதாகக் கூறி, அதே 3 சதவீதம் வட்டி கொடுத்து விடுவதாக தனசேகரனிடம் கடன் பெற்று கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல், அதற்கு சாட்சி கையெழுத்தும் பாரதி போட்டுள்ளார்.
ஆனால், இருவரும் இதுநாள் வரை அசலும், வட்டியும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததுடன், பணம் கேட்டுச் சென்ற தனசேகரனுக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தனசேகரன், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.