இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் குற்றேவல் புரியும் 'எடுபிடி' ஆணையமாக, மற்றொரு பழனிசாமி என்பவரின் தலைமையில் இயங்கும், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பச்சோந்தியாக மாறி, எந்த சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், நகர்ப்புற அமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று வருடங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதுகெலும்பு இல்லாத இந்த ஆணையமும், அதிமுக அரசும் இன்றைக்கு முழுமையாக அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குக் கூட வக்கில்லாமல், திக்குத் தெரியாமல் திணறி, விழி பிதுங்கி நிற்பது வெட்கக் கேடானது. “எங்களுக்குத் தேர்தலைச் சந்திக்க திராணி இருக்கிறது” - “தெம்பு இருக்கிறது” என்று அரசு மேடைகளில் வீராவேசம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சில நாட்களிலேயே அந்தர் பல்டி அடித்து, “அத்து மீறிய அரசு அதிகாரம்” என்ற மயக்கத்தில் இருந்துகொண்டு - ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தலை நடத்துங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கெஞ்சிக் கூத்தாடி இருப்பது, மக்களைச் சந்திக்க அவருக்கு உள்ள அச்சத்தையும் மனநடுக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் மாறி மாறி 'வாய்தா' வாங்கி - பெய்யாத மழைக்கு ஒரு முறை 'ரெட் அலெர்ட்' என்று பொய்யாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எல்லாம் சந்தித்தார்கள். பல்வேறு காலக்கட்டங்களில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் சரமாரியான குட்டுகளையும் கண்டனங்களையும் வாங்கியும், முதலமைச்சரும் திருந்தவில்லை; மாநில தேர்தல் ஆணையரும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை. ஆகவே, இனி மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் ஐக்கியப் படுத்திக் கொண்டு தரம் தாழ்ந்து தகுதி இழந்திருக்கிறது.