ரியஸ் எஸ்டேட் விவகாரம்: திமுக மோதல்; அதிமுக மாமன்ற உறுப்பினர் சங்கர் கடும் கண்டனம்! சென்னை:தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று (ஜூலை 28)மேயர் வசந்தகுமாரி தலைமையில் மாநகராட்சி ஆணையர் அழகுமீனார் முன்னிலையில் தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்கிய பின் 73 தீர்மானங்கள் மாமன்றத்தில் வைக்கப்பட்ட நிலையில் 18 தீர்மானங்கள் வீட்டுமனை விற்பனை தொடர்பாக இருந்தன.
இதில் திமுகவைச் சேர்ந்த சில மாமன்ற உறுப்பினர்கள் ரியல் எஸ்டேட் தொடர்பாக அனுமதி அளிக்கக்கூடாது என்றும்; திமுகவைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்க வேண்டும் எனவும் மாறி மாறி தனது கருத்தை முன் வைத்தனர்.
மேலும், தீர்மானங்கள் குறித்து விவாதித்தபோது, 67-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் நடராஜன் வீட்டுமனைகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக உள்ள பிரச்னைகளைக் கூறினார். அப்போது 4 மற்றும் 5வது மண்டலக் குழுத் தலைவர்கள் காமராஜ் மற்றும் இந்திரன் ஆகியோர் எழுந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு வாக்குவாதம் நடைபெற்றது.
இதனால் மக்கள் மன்றத்தில் மக்கள் பிரச்னைகளை முன் வைக்காமல் ரியஸ் எஸ்டேட் தொடர்பான பிரச்னைகளுக்கு நீண்ட நேரம் ஒதுக்கியதைக் கண்டித்தும், மற்ற பிரச்னைகளை பேசவிடாமல் திமுகவினர் பிரிவுகளாக பிரிந்து பிரச்னை செய்வதையும் கண்டித்து அதிமுக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் தலைமையில் ஒன்பது மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவர்கள் மாநகராட்சியைக் கண்டித்து முழக்கமிட்ட பின் கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சி குழுத் தலைவர் அதிமுக மாமன்ற உறுப்பினர் சங்கர் கூறுகையில், ''இன்று மாமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 73 தீர்மானங்களில் 18 தீர்மானங்கள் ரியல் எஸ்டேட் தொடர்பாகவே உள்ளன. இதில் திமுகவின் ஒரு தரப்பினர் ரியல் எஸ்டேட் தொடர்பாக அனுமதி அளிக்கச் சொல்வதும், மற்றொரு தரப்பு அனுமதி கொடுக்க வேண்டாம் எனச் சொல்வதும், இவர்களே இரு பிரிவுகளாக பிரிந்து மக்கள் பிரச்னை பற்றி பேசாமல் இதைப் பற்றியே பேசி பிரச்னை செய்கின்றனர்.
மேலும், தாம்பரம் மாநகராட்சியில் கடந்த ஒன்றரை வருடத்தில் ஒரு புது மின்விளக்கு கூட மாற்றப்படவில்லை டெண்டர் விட்டு பணத்தை மட்டும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். வேலை ஒன்றும் நடக்கவில்லை. தாம்பரம் மாநகராட்சி படுமோசமாக உள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. குப்பை அள்ள கூட ஆட்கள் இல்லை. கேட்டால் டெண்டர் விடப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சியும் முதலிடத்தைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் தாம்பரத்தை பொறுத்தவரை பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள். இந்தியாவிலேயே படுமோசமான மாநகராட்சி தாம்பரம் மாநகராட்சி தான்'' என கடுமையாக விமர்சித்தார்.
இதனால் தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து விரைவில் மிகப்பெரிய எழுச்சி மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளோம் எனக் கூறினார்
இதையும் படிங்க:ஆடி வெள்ளி; திருவண்ணாமலை ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!