தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 மணி நேர பணி குறித்த சட்டத்திருத்த மசோதா.. கம்யூனிஸ்ட்கள், விசிகவினர் வெளிநடப்பு!

8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் புதிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஆளும் திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

12 மணி நேர பணி சட்ட திருத்த மசோதா.. திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
12 மணி நேர பணி சட்ட திருத்த மசோதா.. திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

By

Published : Apr 21, 2023, 10:52 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரமாக உயர்த்தப்படும். அதேநேரம், அதற்கு உரிய சம்பளம் வழங்கவும், இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 20) தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த மசோதா ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளும், பாமக, பாஜக ஆகிய கட்சிகளும், சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி, “வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே 'ஓடி' (OT - Over Time) என்ற முறை இருக்கையில், இந்த சட்டத் திருத்த மசோதா தேவை இல்லை. 8 மணி நேரம் வேலை என்பதை, இந்த சட்ட மசோதா நீர்த்துப் போகச் செய்கிறது” எனக் கூறினார்.

இதனையடுத்து பேசிய மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார், “இந்த சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும். தேர்வு கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார். இவ்வாறு திமுக கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், “இந்த சட்டத் திருத்த மசோதாவால் தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

8 மணி நேர வேலை, வார விடுமுறை, கூடுதல் ஊதியம் என்ற ஷரத்துகளில் எந்த மாற்றமும் இல்லை. தொழிற்சாலை நெகிழ்வுத் தன்மைக்காகவே, இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை. தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சாலைகளில் மட்டுமே ஆய்வு செய்து, இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர்ந்து இருக்கும்.

தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் செயல்படும். தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால், அரசு நடவடிக்கை எடுக்கும். தொழிலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், அரசு அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும். எனவே, இந்த சட்டத் திருத்தத்தால் தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுந்து நின்றனர். மேலும், சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேச எழுந்தார். ஆனால், அவர் பேச முடியாத அளவுக்கு கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால், “உங்களுக்கு உங்கள் கருத்துகளைச் சொல்வதற்கு உரிமை வழங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதேபோல் எனக்கும் பேச உரிமை இருக்கிறது. நான் பேசுவதற்கு நீங்கள் மறுப்புத் தெரிவிப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். எனவே, உறுப்பினர்கள் அமைதி அடைந்தனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “பல தொழிற்சாலைகள் வர இருக்கிறது. இந்தத் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. யார் 12 மணி நேரம் வேலை செய்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும்தான். மற்ற தொழிற்சாலைகளுக்கு இல்லை.

இது அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. 3 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். வேலை நேரம் கட்டாயம் இல்லை. வேலை செய்யும் இடத்தில் குடிநீர் வசதி, குளிர்சாதன வசதி குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார். இதனையடுத்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், “வாரத்தில் மொத்தம் 48 மணி நேரம், 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை. அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சாலைகளில் மட்டுமே ஆய்வு செய்து, இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும்” எனக் கூறினார்.

இருப்பினும், உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், “இந்த பிரச்னையை உணர்வுப் பூர்வமாக அணுக வேண்டும். இதில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது என்று அமைச்சர்கள் கூறி இருக்கிறார்கள்.

தொழிலாளர்களுக்கு பிரச்னை வந்தால், முதலில் குரல் கொடுப்பவர் நம்முடைய முதலமைச்சர் தான். எனவே நம்புங்கள். தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனிடையே இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க:48 மணி நேரத்தைக் கடந்தும் பணி: நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details