சென்னை:அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். ஒற்றை தலைமையைக் கைப்பற்ற ஈபிஎஸ் அணியினர் தீவிரம் காட்டி வந்தனர். ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்றங்களை நாடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது உள்ள நிலையில் தலைமை நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகளவில் ஈபிஎஸ் அணியில் பயணம் செய்கின்றனர். மேலும் அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் சாவியும் ஈபிஎஸ் வசம் உள்ளது.
பொதுக்குழுவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்ற மேல்முறையீடு செய்த ஓபிஎஸ், கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் நிர்வாகி பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் 80 சதவீதத்திற்கு மேல் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில், "விரைவில் பொதுக்குழு நடைபெறும்" என ஓபிஎஸ் கூறியிருந்தார். சட்டப்போராட்டம் ஒருபுறம் இருக்கக் களத்தில் ஈபிஎஸ் தரப்பை எதிர்ப்பதற்கு ஓபிஎஸ் அணியினர் தயாராகி வருகின்றனர். மேலும், இதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பிற்குச் சாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது.