தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் காவல் உதவி ஆணையருக்கு ஓராண்டு சிறை! - முன்னாள் காவல் உதவி ஆணையருக்கு ஓராண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், முன்னாள் காவல் உதவி ஆணையருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

High court Judgement
உயர்நீதிமன்றம் தீர்ப்பு

By

Published : Apr 19, 2023, 5:51 PM IST

சென்னை:முகப்பேரைச் சேர்ந்த வசந்த குமார் கடந்த 1991ஆம் ஆண்டில் இருந்து 2000ம் ஆண்டு வரை, தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வந்தார். மதுரை காவல்துறை உதவி ஆணையராக இருந்தபோது பணி ஓய்வு பெற்றார். பதவியில் இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வசந்த குமாருக்கு எதிராக, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014ம் ஆண்டு வசந்த குமாரை விடுவித்து உத்தரவிட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை ஒப்புக்கொண்ட விசாரணை நீதிமன்றம், சொத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் மிகாததால், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கருத முடியாது எனக்கூறி, வசந்த குமாரை வழக்கில் இருந்து விடுவித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான மனுவில், ”விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும். ஊழல் தடுப்புச் சட்டத்திற்கு எதிரானது” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மேல்முறையிட்டு மனு கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வசந்த குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வாதாடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிமன்றம், வருமானத்துக்கு அதிகமாக வசந்த குமார் சொத்து சேர்த்ததை உறுதி செய்தது. மேலும் அவரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை ரத்து செய்த உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 19) நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வசந்த குமார் ஆஜரான நிலையில், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு இறுதிகட்ட விசாரணையில் உள்ளது - சிபிஐ!

ABOUT THE AUTHOR

...view details