சென்னை:182ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை மாநில தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்.
தேர்தல் முறையாக நடப்பதை உறுதிசெய்யும் வகையில் சென்னை மாநகராட்சியிலுள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது பல விரும்பத்தகாத, வன்முறைச் சம்பவம் நடைபெற்றதாகவும் அதனைக் கருத்தில்கொண்டு தற்போது கேமராக்கள் பொருத்த வேண்டும் எனக் கோருவதாகத் தெரிவித்தார்.
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகிய அரசு தலைமை வழக்கறிஞர், “ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு பதற்றமான வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாகும், பதற்றமான வாக்குச்சாவடிகள் அல்லது எந்த வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதை மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும், மனுதாரருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 10,12 திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்