சென்னை:தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு, ஜூன் 10ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் பொது நல வழக்கு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படுவதாகவும் பாஜக தரப்பில் வாதிடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்துக்கு முரணான நிலைப்பாடு எடுக்க முடியாது
தமிழ்நாடு அரசு தரப்பில், தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீட் விவகாரத்தில் குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை தமிழ்நாடு அரசு எடுக்க முடியாது என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
வழக்கு குறித்து ஒன்றிய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை ஜூலை 5க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதி குழுவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி நந்தினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் மனுவில், 'மாணவர்கள் பிரச்னைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை, ஓய்வுபெற்ற நீதிபதி குழுவின் ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசிடமே அளிக்க போகிறார் என்றும், அதன்பிறகு அரசுதான் முடிவெடுக்க உள்ளதால், இதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளோ? ஒன்றிய அரசின் உரிமைகளோ? பாதிக்கப்படப் போவதில்லை' எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் உள்நோக்கத்தோடு நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதிகள், திங்கட்கிழமை (ஜூலை5) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளுக்கான வாய்ப்புகள் என்ன?