பண்டிகை காலத்தில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ள உயர்ரக ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிக்கெட் விலையில் தள்ளுபடி வழங்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும். குறிப்பிட்ட ரயில்கள் புறப்படுவதற்கு 1-4 நாட்களுக்கு முன்பாக மக்கள் பயன்பாட்டை பொருத்து கட்டண குறைப்பு செயல்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக ஒரு ரயில் 15 ஆம் தேதி புறப்படுகிறது என்றால் 11 முதல் 14 வரையிலான நான்கு நாட்களில் அந்த ரயிலில் முன்பதிவு நிலவரத்துக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலையில் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த ரயில்களில், ஏசி இருக்கை பெட்டி மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி வகுப்பு ஆகியவற்றில் பயணிப்பவர்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் 60 விழுக்காடு இருக்கைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் 20 விழுக்காடு வரை டிக்கெட்டில் தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல், ரயிலில் பயணிகள் எண்ணிக்கை 70 முதல் 80 விழுக்காடு வரை இருந்தால் டிக்கெட் கட்டணத்தில் 10 விழுக்காடு ரத்து செய்யப்படும்.