இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரிடர் காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு பேரிடர் குறித்தான தகவல்களை குறித்த நேரத்தில் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கியமானதாகும். இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம், மத்திய நீர்வள ஆணையம் போன்ற அமைப்புகளில் இருந்து பெறப்படும் கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்தான எச்சரிக்கைத் தகவல்கள், TNSMART செயலி மூலமும், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், செய்தித்தாள், தொலைக்காட்சிகள் மூலமும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், பேரிடர்கள், விபத்துகளைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், படம் எடுத்து அனுப்பும் வகையிலும் 24 மணி நேரமும் இயங்கும் மாநில அவசரக் கட்டுப்பாடு மையத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனிப்பட்ட வாட்ஸ் அப் எண் 94458 69848 தொடங்கப்பட்டுள்ளது.