சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கான எந்த விதமான பலன்கள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படாமல் ஏமாற்றப்பட்டனர். இதனால் அவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அரசிற்கு எதிராகவும், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கலா, பொதுச்செயலாளர் மலர்விழி வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்து கருத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார
கோரிக்கைகளான சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வழங்குவது, குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்குவது, தற்போது உள்ள ரூபாய் 2000 ஓய்வூதியத்தை மாற்றி குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 9000 வழங்குவது, உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறாதது சத்துணவு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் அளிக்கிறது என்பதை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மையத்தின் மூலம் முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.