சென்னை: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் புதுச்சேரி, தெலங்கானா மாநிலங்களை போல மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்தி தரவேண்டும், ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும், நிரப்படாமல் இருக்கும் அரசு காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திரண்டு மூன்று அம்சக் கோரிக்கைகளை பதாகைகளில் ஏந்தியும், மத்திய மாநில அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தி குடியேறும் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான துணைச் செயலாளர் மாரியப்பன், "கடந்த பத்து வருடங்களாக இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசு எங்களை பேச்சுவார்த்தைக்குக்கூட அழைக்கவில்லை.
2016 புதிய சட்டத்தின்படி எங்களுக்கு கொடுக்க வேண்டிய கூடுதல் நிதியை அரசு வழங்கவில்லை. அதேபோல் வேலைவாய்ப்புகளிலும் எங்களை புறக்கணித்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு புதிய சட்டத்தின்படி தங்களுக்கான வேலையை வாய்ப்புகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டங்கள் தொடரும்" எனத் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவகத்தில் மாற்றுத்திறனாளிகள் நுழைய முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கோட்டாட்சியர் அலுவலகம் நுழைவுவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 50க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் பாதுக்காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.