சென்னை:அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘போலாமா ஊர்கோலம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று(மே 7) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, “பாலுமகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் உருவான இப்படத்தின் நாயகி சக்தி மகேந்திரா, சிறந்த நடிகையாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
சினிமாவை உண்மையாக நேசித்தால் அது நம்மை ஒருபோதும் கைவிடாது. இனி பள்ளிக் கூடங்களில் தமிழ் இருக்குமா..? என்பதே சந்தேகம்தான். தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் தாய்மொழியான தமிழ் மொழி, விருப்பப் பாடமாக இருக்கிறது.
நாட்டுப்பற்று பேசினால் சங்கியா..?:இந்த அநியாயத்தை எதிர்த்து யார் கேள்வி கேட்பது? இந்தியை எதிர்க்கிறோம் என்பதெல்லாம் வேறு. தமிழை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி. இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் சிலரை அழைத்து தமிழில் எழுதச் சொல்லுங்கள். தமிழில் எழுதியதை வாசித்து படிக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் தமிழ்மொழி எவ்வளவு ஆபத்தான சூழலில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் புரியும்.
தற்போதைய சூழலில் பள்ளிக்கூடங்களிலிருந்து மைதானங்கள் மறைந்து போயிருக்கும் நிலையைப் போல், எதிர்காலத்தில் மாணவர்கள் தமிழை எழுதவும், வாசிக்கவும் மறந்து போன தலைமுறை உருவாகிவிடும். இப்பொழுது தேசப்பற்று, நாட்டுப்பற்று என பேசுபவர்களை 'சங்கி' எனக் குறிப்பிடுகிறார்கள்.
கால்பந்து விளையாட்டுதான் இந்தியாவில் சிறந்த விளையாட்டு. அந்த விளையாட்டுதான், இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதும் விளையாட்டு. அதுதான் சுறுசுறுப்பான விளையாட்டு. ஆனால் சோம்பேறி விளையாட்டு என குறிப்பிடப்படும் கிரிக்கெட் இங்கு பிரபலமாகிவிட்டது” என்றார்.
கால்பந்தாட்டம் அல்ல கால்போராட்டமே..!:இதையடுத்து பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில் “அண்மைக்காலமாக இணைய தளங்களில் நேர்காணல் வழங்குவதற்காகக் கட்டணம் வசூலிக்கிறேன். இந்தத் தொகையை ஏழை எளிய மக்களின் கல்விக்காக நன்கொடையாக வழங்கி வருகிறேன். நான் பால்ய காலங்களில் பிறருடைய உதவியால் கல்வியைப் பயின்றேன். தற்போது மற்றவர்கள் கல்வி பயில உதவுகிறேன்.