தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சினிமாவிற்குள் சாதியைக் கலக்காதீர்கள்’ - இயக்குநர் பேரரசு ஆவேசம்! - director perarasu

சென்னையில் நடந்த "கடத்தல்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பங்கேற்றார். விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, “சினிமாவில் சாதியைக் கலக்காதீர்கள்” என ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பேரரசு ஆவேசம்
இயக்குநர் பேரரசு ஆவேசம்

By

Published : Jul 5, 2023, 10:41 PM IST

சென்னை:PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க ‘சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ்’ தயாரித்துள்ள படம் "கடத்தல்". நடிகர் கரண் மற்றும் வடிவேலு நடித்த ‘காத்தவராயன்’, கதிர் மற்றும் ஹனி ரோஸ் நடித்த ‘காந்தர்வன்’, கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த ‘இ.பி.கோ 302’ போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார்.

"கடத்தல்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

இந்த படத்தின் கதாநாயகனாக M.R.தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன், R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள "கடத்தல்" திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதாவது, "கடத்தல் இது என்ன கடத்தல், ஆள் கடத்தலா? எம்எல்ஏ கடத்தலா?. உலகிலேயே மிகப்பெரிய கடத்தல் நாள்கடத்தல் தான். நாம் அனைவரும் நாளைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். சில டைட்டில்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தோன்றும், அப்படியான டைட்டில் இந்தக் கடத்தல். இந்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள்.

செல்வாக்கால் படம் வெற்றி பெறுவதாகச் சொன்னார்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி படங்களை வெற்றிப்படமாக்கலாம், ஆனால் அந்த வெற்றி நிலைக்காது. எவர்கிரீன் வெற்றி என ஒன்று உண்டு, 10 வருடம் கழித்துப் படத்தின் டைட்டில் சொன்னால் நடித்த நடிகர்கள், படத்தின் கதை, சீன் எல்லாவற்றையும் மக்கள் சொல்வார்கள் அந்த வெற்றியைச் செல்வாக்கால் தர முடியாது.

சில படங்களுக்கு விளம்பரம் நிறையச் செய்ய முடியும், அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரம் செய்து தியேட்டருக்கு ஆட்களை வரவைக்கிறார்கள். ஆனால் வெற்றியை மக்கள் தர வேண்டும். என்ன பிரச்னையை வேண்டுமானாலும் படத்தில் சொல்லலாம், நமது வலியைச் சொல்லலாம். ஆனால் அதை மக்கள் அனைவரும் கனெக்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் மக்கள் சிலருக்கு வலியைத் தரும்படி படமெடுக்கக் கூடாது, வன்முறையைத் தூண்டக்கூடாது. இப்போது மக்கள் என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க என்று கவலையுடன் கேட்கிறார்கள். மக்கள் சில நேரம் படம் ஏன் சரியில்லை என கேட்பார்கள் ஆனால் அதை விட, என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க? எனக் கேட்பது பெரிய வலி. சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன், ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லை, எனக்குச் சொல்லவே வலிக்கிறது. நடிகர் விஜய் எனக்கு வாய்ப்பு தந்தார், அவர் என்னிடம் கதை தான் கேட்டார் சாதி கேட்கவில்லை, தயாரிப்பாளர் சௌத்திரி சாதியைக் கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு வருகிறவனிடம் சாதி என்ன என கேட்பவன் இயக்குநரே இல்லை. சிறுபான்மையினர் சாதி மதம் இதையெல்லாம் சினிமாவில் கலக்காதீர்கள்.

இப்படி ஆரம்பித்தால் தேவர் மகன், கவுண்டர் மகன் என படம் வரும் தனித்தனி சாதி குழுக்கள் வரும். அதையெல்லாம் குறை சொல்லவில்லை. சாதிப்படம் வரட்டும் சாதிப்பெருமை பேசட்டும், ஆனால் அடுத்த சாதியைக் குறை சொல்லாதீர்கள். தேவர் மகன் சாதிப்பெருமை பேசிய படமா, அது தேவர் சாதிக்குள் நடந்த கதையைச் சொன்ன படம்.

உண்மையில் தேவர் சாதியினர் தான் அந்தப்படத்தைத் திட்ட வேண்டும், ஏனெனில் அவர்களைக் காட்டுமிராண்டி கூட்டம் என்பார் கமல், சிவாஜியும் அதை மறுத்துப் பேசமாட்டார். அந்தப்படத்தில் ரேவதி யார்?, தாழ்ந்த சாதிப் பெண்ணைக் கல்யாணம் பண்ணியதை பற்றி யாரும் பேசவில்லை. இது போல முன்பு நடந்த கதையை இப்போது பேசி பிரச்னை ஆக்காதீர்கள். சினிமாவிற்குள் சாதி வேண்டாம் சாதியைக் கலக்காதீர்கள். 'கடத்தல்' திரைப்பட குழுவினர் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.

இதையும் படிங்க:D50 படத்தின் அப்டேட் வந்தாச்சு.. மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ்

ABOUT THE AUTHOR

...view details