சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாகச் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச புத்தக கண்காட்சியில், தமிழ் மொழியில் உள்ள பல்வேறு சிறந்த நூல்களைச் சர்வதேச மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
இது குறித்து பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் கூறும்பொழுது, ”சென்னையில் முதல் முறையாக ஜனவரி 16ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றனர்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியுடன், இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களின் புத்தகங்களை அரங்குகளில் வைத்திருப்பார்கள். அதில் சிறந்த புத்தகங்களைத் தேர்வு செய்து மொழிபெயர்க்க விரும்பும் பதிப்பாளர்களுக்கு வசதியாக, அவர்களின் உரிமை மாற்றம் குறித்து கருத்துக்களை பரிமாறிந்து கொள்ளவும், ஒப்பந்தம் செய்து கொள்ளவும் அரங்குகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.