தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி; டிச.11 முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தல்! - private sahool

Announcement for Private Schools: சென்னையில் பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தருதலை உறுதி செய்ய, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
சென்னையில் பள்ளிகள் திறப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 8:11 AM IST

சென்னை:மிக்ஜாம் புயல் விடுமுறைகளுக்குப் பிறகு, வருகிற 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருதி, அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. மழை குறைந்த காரணத்தினால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.

மேலும், மழை பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் என நான்கு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், மீட்பு பணி தொடர்ந்து இன்றும் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான தாலுகாக்களில் 5வது நாளாக இன்றும் (டிச.08) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வருகிற 11ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி முதல்வர் மற்றும் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதில், “மிக்ஜாங் புயல் விடுமுறைக்குப் பின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள் வருகிற 11ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. மழை பாதிப்புகளைத் தொடர்ந்து பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக, பள்ளியின் முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இன்று (டிச.08) முதல் பள்ளிகளுக்குச் சென்று, நிர்வாகத்தோடு இணைந்து பாதுகாப்பான முறையில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

  1. பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
  2. பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் உள்ளிட்ட இதர அறைகளையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
  3. தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரம் வரை மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
  4. பள்ளி வளாகத்தில் இருக்கும் உடைந்த பொருட்களையும், கட்டட இடிபாடுகளையும் அகற்றிட வேண்டும்.
  5. பள்ளி கட்டடங்களின் மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டு, மழைநீர் தேங்காத வகையில், அதனை உறுதி செய்தல் வேண்டும்.
  6. மழையால் பாதிக்கப்பட்டுள்ள வகுப்பறைகளைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பான் முறையில் பூட்டி வைப்பதுடன், அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
  7. வகுப்பறைகளில் உள்ள கதவு, ஜன்னல், பெஞ்ச் போன்றவற்றை சரி செய்து, வர்ணம் பூச நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  8. வகுப்பறையில் உள்ள பூஞ்சைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  9. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுவதும் ஆய்வு செய்து, கொடிய விஷ ஜந்துக்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.
  10. கழிவறைகளில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அதனை சரிசெய்து, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும்.
  11. விளையாட்டுத் திடலை, மேடு பள்ளங்கள் இன்றி சமன்படுத்தி, மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக மாற்றிட வேண்டும்.
  12. பள்ளி வளாகத்தில் நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளிக் கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை மூடப்பட்ட நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  13. குடிநீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மைப்படுத்தி, மாணவர்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  14. மின் இணைப்புகள் சரியாக உள்ளது என்பதை உறுதிபடுத்த வேண்டும். மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் இருப்பதை ஆய்வு செய்து சரி செய்தல் வேண்டும். தேவை என்றால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து, மின்வாரியப் பொறியாளரை உடனடியாக தொடர்பு கொண்டு சரிசெய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  15. மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்கப்பட வேண்டும்.
  16. வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்விசிறி, மின்விளக்கு மற்றும் மின் இணைப்பு ஏதேனும் இருப்பின், அவற்றை பழுது நீக்கி, பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான நிலையில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
  17. பள்ளிக்கு வருகை புரியும் மாணவர்களுக்கு, உரிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தெரிவித்து, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் வேண்டும்.

புயல் மழையினால் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளியில் திறக்கும்போது பாதுகாப்பான முறையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். பள்ளிகள் 11ஆம் தேதி முதல் முழுமையாக செயல்படவும், அரையாண்டுத் தேர்வுகளில் எவ்வித புகார்களுக்கும் இடம் தராமல் திட்டமிட்டு நடத்திடவும், அனைத்து வகை பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வடசென்னை முதல் தென் சென்னை வரை வடியாத வெள்ளம்… மீளாத தலைநகரம்…

ABOUT THE AUTHOR

...view details