சென்னை:காற்றில் ஒப்பு ஈரப்பதம் குறைந்துள்ளதால் சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு வெப்பநிலை உயராது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நம்மிடம் தொலைபேசி வாயிலாக பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது, "கடந்த சில நாள்களுக்கு முன் ஒப்பு ஈரப்பதத்தின் அதிகரிப்பால் வெப்பநிலை உயர்ந்தது.
இதனால் நண்பகலில் வெயிலின் தாக்கமும் வெக்கையும் அதிகமாக இருந்தது. அப்போது ஒப்பு ஈரப்பதத்தின் அளவு 60 முதல் 80 வரை இருந்தது. இது தற்போது 30 முதல் 50 வரை படிப்படியாக குறைந்துள்ளது. எனவே வெயிலின் தாக்கம் இருந்தாலும் வெக்கை இருக்காது” எனத் தெரிவித்தார்.
இதே அளவு வெப்பநிலை இந்த மாதம் (ஏப்ரல் ) முழுவதும் தொடருமா என்றக் கேள்விக்கு, "அடுத்த ஒரு வாரத்திற்கு இதே நிலை தொடரும். பிறகுதான் வானிலையை கணிக்க முடியும்" என்றார்.