'முள்ளும் மலரும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் உதித்த இயக்குநர் மகேந்திரன் இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், மகேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
'தமிழ்த்திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரும், வசன கர்த்தாவுமான மகேந்திரன் மறைந்த தகவலறிந்து வருத்தமுற்றேன். மனித மனங்களின் உணர்வுகளை, வாழ்வின் அழகியலை நுட்பமாக காட்சிப்படுத்தும் திரைச்சித்திரங்களைத் தந்தவர் மகேந்திரன்.
தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாக, அவரது 'உதிரிப்பூக்கள்' படம் கொண்டாடப்படுகிறது. தனிப்பட்ட முறையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீது அவர் கொண்டிருந்த நேசத்தைப் பலமுறை பதிவு செய்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், தமிழ்த்திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.