சென்னை:தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் சங்கங்கள், தாங்கள் நிர்வாக ரீதியாக வெளியிடும் உத்தரவுகளை ஏற்றுக் கொள்ளாமல் அதனை மறுப்பதாக, நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஒன்றிய அளவில் பணிபுரியும் நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களின் கூட்டம், சைதாப்பேட்டையில் இன்று (ஜன.17) நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்கள், தங்கள் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர். அப்பொழுது “வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டங்கள் மற்றும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப ஆய்வகம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதையும் படிங்க: எம்ஜிஆர் பிறந்தநாள் கொடி ஏற்றுவதில் குளறுபடி - இபிஎஸ், ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்!
தொடக்கப் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் விடுபட்டுள்ளன. எனவே, அந்தப் பள்ளிகளிலும் இது போன்ற வசதிகளை ஏற்படுத்தாவிட்டால், அங்கு படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளிக்குச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விடும். எனவே, குறைவான மாணவர்கள் கொண்ட அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், “அரசுப் பள்ளிகளில் தற்போது தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தினை 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்கள் போடும் உத்தரவுகள் மீது சங்கத்தினர் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி உத்தரவுகளை செயல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்த பின்னர் அறிவிப்புகள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டார்ட் அப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!