திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராஜகுரு என்பவரின் மகன் ஆனந்த். இவர் யு.பி.எஸ்.சி. தேர்வெழுதும் பயிற்சி மையத்தில் பயின்றபோது, அருணா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
ஆனந்த் 2016ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராகத் தேர்ச்சிபெற்று தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். ஆனந்த், அருணாவிற்கு 2017ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அருணா, ஆனந்த் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அருணா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, திருமணத்துக்காகப் பெண் வீட்டார் தரப்பில் சுமார் 500 சவரன் நகையுடன், சுமார் நான்கு கோடி ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டதாக அருணா பொய்யான தகவலைக் கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும் செய்தித்தாள்கள், ஊடகங்களில் இதுகுறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த்தின் தந்தை ராஜகுரு சென்னையில் உள்ள காவல் ஆணையரைச் சந்தித்துப் புகாரளித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அருணாவின் வீட்டார் வரதட்சணை கேட்டபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டோம். அது தொடர்பான செல்போன் பதிவு ஆதாரங்களைத் தேனாம்பேட்டை காவல் துறையினரிடம் அளித்துள்ளோம்.