இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியில் ஆளும் பாஜக அரசால் பொருளாதாரம் சீரழிந்து, தொழில்கள் முடங்கி, வேலை வாய்ப்பை இழந்து, தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்றும், ஜெயலலிதா மரணத்துக்கு பின் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும், ஆட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டு, அவர்களுக்கு அடிமை சேவகம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த நெருக்கடியான சூழலில்,மக்களவைத் பொதுத்தேர்தலும், தமிழக சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடக்க உள்ளன. தமிழக மக்களின் ஒட்டுமொத்த துயரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக, இந்த தேர்தல் அமையும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.
கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அதிமுக கூறிவரும் நிலையில், நீட் தேர்வு அவசியம் எனும் தங்கள் நிலைப்பாட்டை கூறி அதிமுகவை ஏற்கச் செய்வோம்' என்று பாஜக கூறி வருவதை சுட்டிக்காட்டினார்.
ஒரு துண்டுச்சீட்டை கைப்பற்றியதாகக் கூறி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம், வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான இடங்களில் 12 கோடி ரூபாய் கைப்பற்றிய பிறகும் தேர்தல் நடப்பதை அனுமதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
விவசாயக் கடன் ரத்து, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, கேபிள் டிவி கட்டணக் குறைப்பு, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம், முதியோர் உதவித் தொகை இரு மடங்காக உயர்வு என மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அளித்திருப்பதாக கூறிய தினகரன், அமமுக சார்பில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சுயேச்சைகளாகப் போட்டியிடும் 59 வேட்பாளர்களுக்கும் ‘பரிசுப் பெட்டகம்’ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வலியுறுத்தினார்.
எனவே, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து விவசாயத்தையும், பொருளாதாரத்தையும் அழிக்க முயற்சிக்கும் பாஜக அரசையும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என, தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.