சென்னை:தமிழ்நாடு பாஜக மாநில செயலாளரும், தகவல் தொழிநுட்ப பிரிவு மாநில செயலாளருமாக இருந்த திலீப் கண்ணன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து தொடர்ந்து மாநில நிர்வாகிகள் விலகுவது அதிகரித்து கொண்டே வருகிறது. பாஜகவில் இருந்து விலகி செல்பவர்கள் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதனால் பாஜகவின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது என அக்கட்சியினர் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
நேற்றைய தினம் பாஜகவின் தகவல் தொழிநுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார். அதற்கு முன்பாக மதுரை டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார். அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகினார். பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து போராட்டம் மற்றும் திமுகவினர் மீதான குற்றச்சாட்டு போன்றவற்றில் அதிரடியை தொடங்கினார். ஆனால் கட்சிக்குள் ஆடியோ, வீடியோ விவகாரங்கள் பல குழப்பங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
விலகிய அனைத்து நிர்வாகிகளும் பொதுவாக கூறக்கூடிய வார்த்தையாக வார் ரூம்(War room) இருக்கிறது. அப்படி என்ன தான் வார் ரூமில் செய்கிறார்கள் என்ற சந்தேகம் பாஜகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு எதிராக கருத்து கூறும் பாஜகவினரை கடுமையாக விமர்சனம் செய்வதற்காக வார் ரூமை பயன்படுத்துகின்றனர் என நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருந்தார். அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் ஏற்கனவே இருந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஓரம்கட்டும் வேலைகளில் ஈடுபடுவதால் அக்கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் வெளியேறுவதற்கு காரணம் என வெளியேறியவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
பாஜகவில் இருந்து விலகியது குறித்து விளக்கம் அளித்துள்ள திலீப் கண்ணன், "கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ?. தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்? இறைவனுக்கே வெளிச்சம். ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து, இன்று வரை சீன் போட்டுட்டு இருக்கார்.
தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார்?. தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன். அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை. அவரை முதலில் காலி செய்தார். மாநில பொதுச்செயலாளர் மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள் அவர்களில் மூவருக்கு பெரிய பொறுப்பு கொடுத்துவிட்டு, தன்னைவிட அறிவாளியான பேராசிரியர் சீனிவாசனுக்கு மட்டும் பெரிய பொறுப்பாளர் கொடுக்கவில்லை.