கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரியும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 30) விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், குழந்தைகள், வளரிளம் பெண் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று வழங்கிவருகின்றனர். இதன் மூலம் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளனர்.
மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதால் மாணவர்களைத் தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது” என்று தெரிவித்தார்.