சென்னை: மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த மம்தா பானர்ஜி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு பிறகு இரண்டு பேரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த அவர்கள், மரியாதை நிமித்தமாக என்னை வந்து சந்தித்துள்ளார்கள். கலைஞரின் சிலை திறப்பின் போது அவர் கலந்துகொண்டு திறந்துவைத்தது, திமுகவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமையான தருணம்.
மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக வரவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். தேர்தல் சந்திப்பு அல்ல. தேர்தல் பற்றி பேசவில்லை. அரசியல் பற்றி பேசவில்லை. வேறு எதுவும் இல்லை’ எனக் கூறினார்.
பின்னர் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 'மேற்கு வங்க ஆளுநரின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்தேன். முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி தவிர்க்க முடியும். அவரை சந்திப்பது என்னுடைய கடமை.
மேலும் இருவரின் சந்திப்பின்போது மாநில வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. நான் எந்த கட்சியைப்பற்றியும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட மற்றும் சகோதரத்துவ சந்திப்பு' எனக் கூறினார்.
இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை - மம்தாவுடன் கூட்டாக சேர்ந்துகூறிய முதலமைச்சர் ஸ்டாலின்
இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பில் வருகிற மக்களவைத்தேர்தல் குறித்தும், பாஜக அல்லாத சமூகநீதி கூட்டமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்தும் ஆலோசனை செய்திருக்க வாய்ப்புள்ளது எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் பாஜக நிர்வாகியின் மகன்கள் இருவரைக்காணவில்லை - போலீசார் விசாரணை