தமிழ்நாட்டை கலக்கிய காவல் துறையினர் பட்டியலில் ஜாங்கிட்டுக்கு தனி முத்திரை உண்டு. அவர் இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் ஓய்வு பெறுவதையொட்டி இந்திய காவல் துறைக்கும், சக காவலர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
'தீரன்' டிஜிபி ஜாங்கிட் சக காவலர்களுக்கு நன்றி கடிதம் - police department
சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துக் கழக டிஜிபியாக பணியாற்றிய எஸ்.ஆர்.ஜாங்கிட் இன்று மாலையுடன் ஓய்வு பெறுவதையொட்டி காவல் துறைக்கும், சக காவலர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில் "இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். என்னுடன் பணியாற்றிய காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் என அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முக்கியமாக, திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஏற்பட்ட சாதி மோதலை கட்டுப்படுத்தியது, பவாரியா கும்பலை கண்டுபிடித்தது, வெள்ளை ரவி, பங்க் குமார் போன்ற பிரபல ரவுடிகளின் மீதான நடவடிக்கையின்போதும், மிக முக்கியமான காலகட்டங்களில் கடுமையான சிரமங்களுக்கிடையிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியதை நான் என்றும் மறக்கமாட்டேன். என்னுடைய 34 ஆண்டு கால சிறப்பான பணிக்கு, இரவு பகலாக ஒத்துழைத்த நீங்கள் அனைவரும்தான் காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். இன்றுடன் நான் ஓய்வு பெறுகின்ற இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதுடன், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.