சென்னை:கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், "திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரத்தின்போது பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அந்த இரு வேட்பாளர்களுக்கும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 550 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. அதற்கான உரிய கணக்குகளை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையிலும், இன்னும் தாக்கல் செய்யவில்லை. நட்சத்திரப் பேச்சாளர் அனுமதி பெறும் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளருக்கே வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அனைத்து அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தனர்.
இது விதி மீறல். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது விதிமீறல் ஆகும். தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாமல், விதிகளை மீறி 70 கொட்டகைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப்பதிவு நாள் வரை தினமும் வாக்காளர்கள் தங்க வைக்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டது.