தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 23, 2021, 8:02 AM IST

ETV Bharat / state

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாது - தமிழ்நாடு அரசு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதைத் தவிர வேறெந்த தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

MHC
MHC

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைத் தூர்வார 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுந்தர்ராஜன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வாரினால் பல்லுயிரின வளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மேம்படுத்துவதற்கும், பாதுகாக்கவும் 2012ஆம் ஆண்டு 'பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையம்' அமைக்கப்பட்டபோதும், ஆணையத்தின் மூலமாக அல்லாமல் தூர்வாரும் திட்டத்திற்காக 20.30 கோடி ரூபாயை நேரடியாக வனத் துறைக்கு வழங்கியது சட்டவிரோதம் எனவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் முன்னிலையாகி வாதிட்டார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஹர்ஷராஜ் முன்னிலையாகி, சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க 20.30 கோடி ரூபாய் பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனவும், அதை உறுதிசெய்யும் வகையில், விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும், சதுப்பு நிலத்தில் உள்ள இடிபாடுகளை அகற்றி, கரைகளைப் பலப்படுத்தவே தூர்வாரப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் இனிமேல் சதுப்பு நிலம் தூர்வாரப்பட மாட்டாது எனவும் உறுதி தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மேற்கொண்டு வழக்கை பரிசீலிக்க எதுவுமில்லை எனக் கூறி முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: ”சுங்கச்சாவடி தவிர மற்ற இடங்களில் வேகத்தடைகள் அமைக்கக்கூடாது”

ABOUT THE AUTHOR

...view details