சென்னை:தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 4,74,543 மாணவர்களும் 4 லட்சத்து 63 ஆயிரத்து 522 மாணவிகளும் இரண்டு திருநங்கைகள் என 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 பேர் தேர்வினை எழுதப் பதிவு செய்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு மார்ச் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் செய்முறை தேர்வு எழுத பள்ளிகள் படித்து இடையில் நின்ற மாணவர்கள் அதிக அளவில் வரவில்லை என்ற தகவல் வெளியானதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு 31 ஆம் தேதி வரை நடத்துவதற்கு அரசு தேர்வு துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும், இந்த நாட்களுக்குள் செய்முறை தேர்வு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்வதற்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை பள்ளிக்கு வராமல் பத்தாம் வகுப்பில் இடைநின்ற மாணவர்களின் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மாணவர்கள் எந்த பள்ளியில் எத்தனை பேர் பள்ளிக்கு வரவில்லை என்ற விபரம் வெளியாகி உள்ளது.