சென்னை:மருத்துவப் படிப்பு கலந்தாய்வு பங்கேற்க வந்த மாணவர்களில் 14 பேரின் இருப்பிடச் சான்றிதழில் குளறுபடிகள் இருந்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொது கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் வெளிமாநிலத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சான்றிதழில் சந்தேகம் இருப்பவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதுவரை, மருத்துவப் படிப்பில் பங்கேற்க வந்த 14 மாணவர்கள் இருப்பிட சான்றிதழ் பிரச்னையால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள தகவலில், "எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று(டிசம்பர் 4) நடைபெற்ற கலந்தாய்விற்கு 472 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் கலந்தாய்வில் 453 மாணவர்கள் பங்கேற்றனர். 19 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 148 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் 217 இடங்கள், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 19 இடங்கள் என 384 இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 67 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்புப் பட்டியலில் வைத்துள்ளனர்.