சென்னை:தமிழகத்தில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சலால் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்து உள்ளது. இன்னும் 2 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பருவகால மாற்றத்தால் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து உள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
நோய் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்று ஆய்வு மையங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. நடப்பாண்டில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.