சென்னை: அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'திருக்குறளை பொழிபெயர்த்தபோது ஜி.யு.போப், அதிலிருந்து ஆன்மிகத்தைப் பிரித்துவிட்டார்' எனக் குற்றம்சாட்டினார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருக்குறள் குறித்த ஆளுநரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, இன்று(செ.11) சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு, உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழ.கருப்பையா, எம்.ஜி.கே. நிஜாமுதீன், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், தடையை மீறி ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்ற பழ.நெடுமாறன், பழ.கருப்பையா உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: பாரதியாருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர்