தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால், குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் எவ்வித ஆவணங்களுமின்றி எடுத்துச் செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விவசாய விளைபொருள்கள் விற்பனை செய்த பணத்தை விவசாயிகளிடம் பறிமுதல் செய்வதை தேர்தல் பறக்கும் படையினர் தடுக்க வேண்டும் என தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவர் மணிகண்டன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருள்களான நெல், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை மார்க்கெட் கமிட்டி, விவசாய கமிஷன் கமிட்டி ஆகிய இடங்களில் விற்பனை செய்த பின்பு திரும்பும்போது விவசாயிகளிடம் பறக்கும் தேர்தல் படையினர் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் விவசாய பொருள்களை விற்றுவிட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தாலும் மற்றும் அதற்கான ஆதாரமாக சாக்குப் பைகளை காட்டினாலும் பறக்கும் தேர்தல் படையினர் அதை பொருட்படுத்தாமல் விவசாயிகளின் பணத்தை பறிமுதல் செய்கின்றனர்.