தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் இன்றைய நிலை?

சென்னை: கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் இன்றைய நிலை குறித்தான “திட்ட நிலை அறிக்கையை” இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

பட்ஜெட்
பட்ஜெட்

By

Published : Feb 12, 2020, 5:17 PM IST

சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போதும் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதும், சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதும் வழக்கமான நடைமுறை ஆகும். குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், வருகிற பிப். 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் ஏராளமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழலில், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திவரும் கோரிக்கை ஒன்றை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்.

ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் புதுப்புது திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுத்தப்பட்டனவா, கைவிடப்பட்டனவா என்பது குறித்தான அறிக்கை எதுவும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வெளியாவதில்லை. பட்ஜெட் வாசிக்கப்படும், பின்பு துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும், அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகள் வெளியிடப்படும். அத்தோடு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்துவிடும். இப்படிப்பட்ட நடைமுறையால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பதை பொதுமக்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, பட்ஜெட் தாக்கலின்போதோ அல்லது பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள்ளோ கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பது குறித்தான திட்ட நிலை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட வேண்டும்.

இந்த அறிக்கையில், திட்டம் தொடங்கப்பட்டுவிட்டதா- திட்டமிடல் நிலையில் உள்ளதா - எத்தனை விழுக்காடு பணிகள் முடிந்துள்ளன - எப்போது முழுமையடையும்- தவிர்க்க இயலாத காரணங்களால் திட்டம் கைவிடப்பட்டதா - முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டதா- என்பது குறித்தான விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும்.

தம்ழிநாடு பட்ஜெட்டானது இரண்டு லட்சம் கோடியைக் கடந்துள்ளது. மக்களின் வரிப்பணமான இந்தப் பெருந்தொகையானது எப்படி செலவிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை பொதுமக்கள் அனைவருக்கும் இருக்கிறது. மக்களுக்கு இவ்விவரங்களைத் தெரிவிக்கவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு4ன்படி, அரசின் செயல்பாடுகள் குறித்தான விவரங்களை, ஒவ்வொரு துறையும் ”தானே முன்வந்து பொதுமக்களுக்கு அளிக்கவேண்டும்(Voluntary Disclosure of Information to public).

இச்சட்டப்பிரிவின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் மேற்கோரிய “திட்ட நிலை அறிக்கையை” அரசு வெளியிடவேண்டியது அவசியமாகிறது. தமிழ்நாடு அரசானது எந்தப் பணியையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுவதற்கில்லை. வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் செய்யப்பட்டனவா என்பதுதான் கேள்வி. அதில், ஊழல்-முறைகடுகளால் தாமதமானதா என்பதுதான் கேள்வி. பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை என்றால், சில ஆண்டுகளில் திட்டமதிப்பீடு இருமடங்காகிவிடும்.

ஆகவே, மக்களின் வரிப்பணமானது செலவழிக்கப்படும்விதத்தில் முறையான திட்டமிடல், செயலாக்கம் என்பது மிகவும் அவசியமாகிறது. நான்கு லட்சம் கோடி கடனில் இயங்கும் தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாகத்தை முறைப்படுத்த இதுபோன்ற சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அப்போதுதான், அரசின் திட்டங்கள் யாரால் தாமதமாகின்றன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது அரசுக்கும், மக்களுக்கும் தெரியும். மக்களின் பணம் முறையாக செலவிடப்படுவது உறுதிசெய்யப்படும்.

இதனைக் கருத்தில் கொண்டு, பட்ஜெட் தாக்கலின்போதோ அல்லது பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள்ளோ கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளின் இன்றைய நிலை என்ன என்பதை விளக்கும் “திட்ட நிலை அறிக்கை 2020”யை நிதியமைச்சர் வெளியிட வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details