மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கரோனா நடவடிக்கைகள் குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர காய்ச்சல் பிரிவு, கரோனா சிகிச்சைப் பிரிவு, சென்னை மெட்ரோ ரயில் நிலையம், தேனாம்பேட்டை ஆம்புலன்ஸ் அலுவலகம், கரோனா 104 கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் மக்கள் நல் வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
கரோனா பாதிப்புடன் டெல்லியிலிருந்து வந்து நபருடன் தொடர்பிலிருந்த 163 நபர்களை தனிமைப்படுத்தி உள்ளோம். அதேபோல், அயர்லாந்திலிருந்து வந்த நபருடன் தொடர்பிலிருந்த 94 நபர்ககளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் கைகளில் முத்திரை வைக்கப்படும். கரோனா பாதுகாப்பு 104 எண்ணுக்கு நாள்தோறும் 500 அழைப்புகளுக்கும் மேல்வருகின்றன. பொதுமக்கள் பல்வேறு சந்தேகங்களை கேட்கின்றனர்.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்ல வேண்டாம். மக்கள் கூட்டதிலிருந்து விலகியிருக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தாலோ, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். வெளியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து வகைப் பயணிகளும், தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்தித்திப்பின்போது தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு டெல்லியிலிருந்து வந்த நபருக்கு எப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது சவாலாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் டெல்லியிலிருந்து வந்ததாலும் அங்குள்ள அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது எனத் தெரிவித்தார். மேலும் முகக் கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்ய தயாராக இருப்பதாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'மக்கள் ஒத்துழைப்பு தந்தால் இந்தப் பேரிடரைச் சமாளிக்க முடியும்'