சென்னை:தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் பால் கனகராஜ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கடந்த 12-ம் தேதி தினசரி நாளிதழ் ஒன்றின் வலைதளத்தில் ஆருத்ரா மோசடியில் எனக்குத் தொடர்பு இருப்பதாக போலியான செய்தி ஒன்று வெளியானது. இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதன் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்தியபோது தினசரி நாளிதழின் பெயரில் போலியான செய்தியைப் பரப்பியது தெரியவந்தது.
ஆருத்ரா நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வருவதாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில விஷமிகள் அவதூறு பரப்பி வருகின்றனர். பொய் செய்தியை பரப்பிய விஷமிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் ஹரிஷ், பாஜக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து பதவி பெற்றதாக போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது சட்டப்படி ஆதாராமாக செல்லாது. அவ்வாறு கூறப்பட்டதற்கான ஆதாரங்கள், மற்றும் அதன் சொத்துகளை மீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.