சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பிரிட்டிஷ் கவுன்சில் உடன் இணைந்து செயல்படுத்தும் தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்ட ஒப்பந்தம் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் கையெழுத்தானது.
அதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, 'தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டமானது (DDU-GKY) 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கிராமப்புற ஏழை, எளிய இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளித்து, அவர்களுக்கு நிரந்தரமான மாதாந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதை குறிக்கோளாகக் கொண்டு 2012ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மென்திறன் பயிற்சிகள் மூலமாக, இளைஞர்கள் தங்களது அடிப்படை ஆங்கில அறிவு, ஆங்கிலத்தில் உரையாடும் அறிவு, மின்னஞ்சல்கள் பயன்பாடு, வேலை வேண்டி விண்ணப்பிப்பதற்குத் தேவையான சுயவிவர படிவங்கள் தயாரிக்கும் முறைகள், வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் நேர்காணலை எதிர்கொள்ளும் வழிமுறைகள், ஆளுமைத் திறன், குழுவாக இணைந்து செயல்படுதல் என பன்முகத்திறன் கொண்டவர்களாக மெருகேற்றப்படுவதால் பயிற்சிக்குப் பின் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவது எளிதாகிறது.
இத்திட்டத்தில், மென்திறன் பயிற்சிகளை சீரமைக்கும் நோக்கில் அனைத்துப் பயிற்சி நிறுவனங்களும் ஒரே சீரான மென்திறன் பயிற்சி முறையை கையாளுவதற்காக DDU-GKY திட்டம் மூலம் எடுக்கப்படும் சிறப்பு முயற்சியே "ஆங்கில அறிவு மற்றும் மென்திறன் பயிற்சிக்கான பாடத் திட்டங்களை தரப்படுத்துதல் திட்டம்'' ஆகும்.
இத்திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக பொருளாதார புத்தாக்கத் (NRETP) திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தை தொழில் நுட்ப உதவி நிறுவனமாக கொண்டு செயல்படுத்திட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து DDU-GKY பயிற்சி நிறுவனங்களைச் சார்ந்த ஆங்கில அறிவு மற்றும், மென் திறன் பயிற்சி வழங்கும் பயிற்சியாளர்களுக்கும் இந்நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு அவர்கள் வாயிலாக DDU-GKY திட்டத்தின் கீழ் பயிற்சி பெற உள்ள இளைஞர்களுக்கு தரத்துடன் கூடிய சிறந்த ஆங்கில அறிவு பயிற்சி கிடைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தின் மூலம் DDU-GKY திட்டத்தின்கீழ் திறன் பயிற்சி பெரும் இளைஞர்கள் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற ஆங்கில அறிவு கற்றுக்கொடுப்பதற்கு தேவையான பாடத்திட்டம் வடிவமைத்துத் தரப்படும். இச்சிறப்பு முயற்சியின் பலனாக, இவ்வாண்டு 40.000 நபர்களுக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் இளைஞர்கள் தங்களது ஆங்கில அறிவு மற்றும் மென்திறன் திறமைகளை மேம்படுத்தி உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று எளிதில் வேலை வாய்ப்பு பெற்று வாழ்வாதாரத்தை மிகச்சிறந்த முறையில் அமைத்துக் கொள்வர் என்பது இதன் சிறப்பம்சமாகும்' என்றார்.
இதையும் படிங்க:மக்களை சூப்பராக ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனைப் படைத்தவர் முதலமைச்சர் - கடம்பூர் ராஜூ