சென்னை:மாணவி பிரியா மரணத்தில் கடமையை செய்யத் தவறிய மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட காது, மூக்கு, தொண்டை (ENT) உயர் நிலை நிலையத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவி பிரியா மரணம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கவனக்குறைவால் கடமையை செய்யத் தவறிய மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
மேலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 400 காக்லியர் இம்பிலாண்ட் (cochlear implant) சிகிச்சைகள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை 5035 காக்லியர் இம்பிலாண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செவிதிறன் கருவிகள் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இதற்காக 358 கோடியே 44 லட்ச ரூபாய் மருத்துவக்காப்பீட்டில் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவிலேயே மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2022 வரை 87 ஆயிரத்து 294 பயனாளிகளுக்கு காதுகேள் கருவி 70 கோடியே 17 லட்ச ரூபாயில் காப்பீடுத் திட்டம் மூலம் அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தற்போது 19 அரசு மருத்துவமனைகளில் இந்த காக்கிலியர் இம்பிலாண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தேவைப்பட்டால் மாவட்ட மருத்துவமனைகளில் இன்னும் ஓராண்டில் காக்லியர் இம்பிலாண்ட் அறுவை சிகிச்சைக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்: வழக்கு பிரிவு மாற்றம்