சென்னை கிழக்கு தாம்பரம் காந்தி நகர் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச்சேர்ந்தவர் சாலமன் அமல்ராஜ்(39). இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் இசை கருவியின் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனது நான்கு வயது மகள், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு முதல் நாள் செல்வதால், சாலமன் குழந்தையை பள்ளியில் விடுவதற்குச்சென்றுள்ளார்.
அப்போது பள்ளியில் மகளை விட்ட பின்னர், சாலமனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இது சாதாரண வாய்வு கோளாறு பிரச்னை எனக்கூறிவிட்டு சில சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால், வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது உறவினர்கள், மீண்டும் அதே மருத்துவமனைக்கு சாலமனை அழைத்து வந்துள்ளனர். அப்போது சாலமனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.